சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் அண்ணா பூங்கா மறுசீரமைப்பு பணிகள்
சேலம் மாநகராட்சி, அஸ்தம்பட்டி மண்டலத்தில் சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ், ரூ.12 கோடியே 90 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் அண்ணா பூங்கா மறுசீரமைப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
சீர்மிகு நகர திட்டத்தின் கீழ்
ரூ.12 கோடியே 90 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும்
அண்ணா பூங்கா மறுசீரமைப்பு பணிகள்
மாநகராட்சி ஆணையாளர் திரு.ந. இரவிச்சந்திரன் அவர்கள் ஆய்வு செய்தார்
சேலம் மாநகராட்சி, அஸ்தம்பட்டி மண்டலத்தில் சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ், ரூ.12 கோடியே 90 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் அண்ணா பூங்கா மறுசீரமைப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் ரூ.12 கோடியே 90 இலட்சம் மதிப்பீட்டில் அஸ்தம்பட்டி மண்டலத்திற்குட்பட்ட அண்ணா பூங்காவினை மறுசீரமைப்பு செய்து பல்வேறு அம்சங்களுடன் கூடிய பொழுதுபோக்கு பூங்காவாக மாற்றியமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பெரியவர்களும் குழந்தைகளும் குளிர்நிலையில் (–5 டிகிரி) சறுக்கி விளையாடக் கூடிய “பனி உலகம்” 7200 சதுர அடி பரப்பளவிலும், குடும்பத்துடன் தண்ணீரில் சறுக்கி விளையாடும் “குடும்ப குளம்” 3600 சதுர அடி பரப்பளவிலும், சிறுவர்கள் விளையாடுவதற்கான தண்ணீர் பீச்சியடிக்கும் களம் 1200 சதுரஅடி பரப்பளவிலும் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
குடும்பத்துடன் அருவியில் குளிக்கும் வகையில் 30 அடி உயர செயற்கை அருவி, குதிரை அமைப்புக்கொண்ட மெர்ரி-கோ-ரவுண்டு எனப்படும் தரைமட்ட ராட்டினம், கேப்ஸ்யூல் எனப்படும் தரைமட்ட வட்ட இராட்டினம், ஸ்விங் - சேர் எனப்படும் கயிறு இராட்டினம், சிறுவர்களுக்குகான செயற்கை மோட்டார் வாகனம் மற்றும் செயற்கை ரயில் இராட்டினம் போன்ற பொழுதுப்போக்கு அம்சங்கள் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது.
அனைவரும் கண்டு மகிழும் வகையில் 70 அடி அகலத்தில் இசைக்கேற்ப நடனம் ஆடும் லேசர் விளக்கு வண்ண நீரூற்று, தண்ணீரில் நனைந்து விளையாடும் செயற்கை மழை நடன மேடை, 200 பேர் அமர்ந்து கண்டுகளிக்கும் திறந்தவெளி எல்.இ.டி திரை அரங்கம் ஆகியவை அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது. இப்பூங்காவின் முகப்பு தோற்றம் அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் புதுப்பொலிவுடன் மாற்றியமைக்கப்படவுள்ளது.
மேலும், இப்பூங்காவினை சுற்றி புதிய சுற்றுசுவர் அமைக்கப்பட்டு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளது. பசுமையான புல் தளம், உணவகங்கள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, நவீன கழிப்பறை, மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு மற்றும் இரண்டு/ நான்கு சக்கர வாகன நிறுத்த வசதிகள் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளும்அமைக்கப்பட்டு வருகிறது
அண்ணா பூங்காவில் நடைபெற்று வரும் பணிகளை பொறியாளர்களுடன் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர் அவர்கள், பணிகளை விரைந்து மேற்கொண்டு விரைவில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.
இவ்வாய்வின் போது உதவி செயற்பொறியாளர் திரு.எம்.ஆர். சிபிசக்ரவர்த்தி, திரு.எஸ். செந்தில்குமார் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.