சேலம் மாநகராட்சியை மாசில்லா மாநகராட்சியாக மேம்படுத்த கல்வி நிறுவனங்கள் இணைந்து பணியாற்ற வேண்டும்
சேலம் மாநகராட்சியை தூய்மையாகவும், பசுமையாகவும் மேம்படுத்துதல் தொடர்பாக சோனா கல்விக் குழும நிர்வாகிகளுடன் கலந்துரையாடல் சோனா தொழில்நுட்பக் கல்லூரி கூட்ட அரங்கில் இன்று (18.02.2021) நடைப்பெற்றது. கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் திரு. ந. இரவிச்சந்திரன் அவர்கள் தெரிவித்ததாவது.
சேலம் மாநகராட்சியை மாசில்லா மாநகராட்சியாக மேம்படுத்த கல்வி நிறுவனங்கள் இணைந்து பணியாற்ற வேண்டும்.-மாநகராட்சி ஆணையாளர் திரு. ந. இரவிச்சந்திரன் அவர்கள்
சேலம் மாநகராட்சியை தூய்மையாகவும், பசுமையாகவும் மேம்படுத்துதல் தொடர்பாக சோனா கல்விக் குழும நிர்வாகிகளுடன் கலந்துரையாடல் சோனா தொழில்நுட்பக் கல்லூரி கூட்ட அரங்கில் இன்று (18.02.2021) நடைப்பெற்றது. கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் திரு. ந. இரவிச்சந்திரன் அவர்கள் தெரிவித்ததாவது.
சேலம் மாநகராட்சியினை குப்பையில்லா மாநகராட்சியாக மாற்றுவதற்கும் மற்றும் நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்தி அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கும் மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, சமூக மேம்பாட்டு செயல் திட்டங்களை சிறப்பாக மேற்கொண்டு வரும் சோனா கல்வி குழுமத்துடன் இணைந்து மாநகர சுகாதார மேம்பாட்டுத் திட்டங்களை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.
சேலம் மாநகராட்சியின் இணையதளத்தை மேம்படுத்தி, மக்களுக்கு நிறைவான சேவையினை வழங்குதல், தூய்மை பணியில் ஈடுபடுத்தப்பட்டு வரும் வாகனங்களின் போக்குவரத்தினை கண்காணித்தல், சுற்றுப்புற மாசினை குறைக்கும் வகையில் புதிய செயல் திட்டம் உருவாக்குதல் போன்ற பணிகளுக்காக புதிய செயலியை உருவாக்க சோனா கல்வி குழுமம் முன்வர வேண்டும். மாநகராட்சியினால் மேற்கொள்ளப்பட்டு வரும் அரசின் மக்கள் நலத் திட்டங்கள் அனைத்து மக்களையும் சென்றடையும் வகையில் சமூக வலைதளங்கள் வாயிலாக விளம்பர படுத்தும் பணியினையும் மேற்கொள்ள வேண்டும்.
திடக்கழிவு மேலாண்மை திட்டங்களை சிறப்பாக செயல் படுத்திடவும், திடக்கழிவுகளை மக்கும் குப்பை மக்கா குப்பை என தரம் பிரித்து சேகரித்தல், மாடித் தோட்டம் உருவாக்குதல், வீட்டில் உள்ள மக்கும் குப்பைகளை பயன்படுத்தி உரம் தயாரித்தல், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு ஏற்படுத்துதல், அரசால் தடைசெய்யப்பட்ட நெகிழியை பயன்படுத்தாமல் இருத்தல், டெங்கு கொசு ஒழிப்பு, கொரோனா தடுப்பு நடவடிக்கை போன்றவற்றில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் கல்லூரியின் அனைத்து மாணவர்களையும் ஈடுபடுத்தும் செயல்திட்டம் உருவாக்க வேண்டும்.
மாநகராட்சிப் பகுதியில் உள்ள அனைத்து மக்களும் பயனடையும் வகையில் இயற்கை மருத்துவ சிறப்பு முகாம்களை வாரம் தோறும் நடத்திடவும், ஏரிகள் அமைந்துள்ள பகுதிகளை அழகு படுத்தி சுற்றுலாதலமாக மேம்படுத்துதல் தொடர்பாக ட்ரோன் வாயிலாக ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். மாநகராட்சி ஒதுக்கீடு செய்யும் பகுதிகளில் """"நகருக்குள் வனம்"" உருவாக்கி பராமரித்திடவும், நாட்டு நல பணித்திட்ட மாணவர்களை ஈடுபடுத்திட வேண்டும்.
சமூக, பொருளாதாரத்தில் பின் தங்கி உள்ள மக்கள் அதிகமாக வாழும் பகுதிகளை தத்தெடுத்து, அவர்களின் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான ஆய்வுகளை மேற்கொள்வதுடன், தேவையான திறன் மேம்பாட்டு பயற்சிகளை வழங்க முன்வர வேண்டும். மாநகராட்சிப் பள்ளிகளை தத்தெடுத்து, மாணவர்களுக்கு ஆங்கில மொழி பயிற்சி மற்றும் விடுமுறை காலங்களில் விளையாட்டு திறன் மேம்படுத்துதல் சிறப்பு முகாம்கள் நடத்திட முன்வர வேண்டும்.
சேலம் மாநகராட்சியை மாசில்லா மாநகராட்சியாக மேம்படுத்த மேற்கொள்ளப்படும் அனைத்து நடவடிக்கைகளிலும் மாநகராட்சி நிர்வாகத்துடன் சோனா கல்வி குழுமம் இணைந்து செயல்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
நிகழ்ச்சியில் மாநகர நல அலுவலர் மரு. கே.பார்த்திபன், சோனா கல்வி குழும துணைத் தலைவர் திரு.தியாகு வள்ளியப்பா, தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் திரு.வி. கார்த்திகேயன், மரு.தே. சசிகுமார் மற்றும் அனைத்து துறைத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
பின்னர், கல்லூரி வளாகத்தில் உள்ள திடக்கழிவு மேலாண்மைத் திட்ட மண் புழு உரம் உற்பத்தி கூடத்தினை மாநகராட்சி ஆணையாளர் அவர்கள் பார்வையிட்டார்.